“ஜெய்பீம் படத்துக்குப் பிறகு தமிழ்ல எனக்கு நிறைய வாய்ப்புகள் வரும்னு எதிர்பார்த்தேன். ஆனா, அப்படி எதுவும் நடக்கல…” என வெளிப்படையாகத் தெரிவித்துள்ளார் நடிகை லிஜோமோல் ஜோஸ்.
மலையாள நடிகையான லிஜோமோல் ஜோஸ், ‘சிவப்பு மஞ்சள் பச்சை’ படத்தின் மூலம் தமிழில் அறிமுகமானார். தொடர்ந்து, ‘தீதும் நன்றும்’, ‘ஜெய்பீம்’, ‘புத்தம்புது காலை விடியாதா’ உள்ளிட்ட சில தமிழ்ப் படங்களில் நடித்தார். சமீபத்தில் கூட ‘காதல் என்பது பொதுவுடைமை’, ‘ஜென்டில்வுமன்’ ஆகிய தமிழ்ப் படங்களில் நடித்தார்.
‘ஜெய்பீம்’ படத்தில் செங்கேணியாக மிகச்சிறந்த நடிப்பை வெளிப்படுத்தியிருந்தார், லிஜோமோல் ஜோஸ். அந்தக் கதாபாத்திரமாகவே வாழ்ந்ததால், நிறைய ரசிகர்களையும் பெற்றார். ‘ஜெய்பீம்’ படத்துக்குப் பிறகு தமிழில் நிறைய படங்களில் நடிப்பார் என்று எதிர்பார்த்தால், அவரோ வெகு அரிதாக ஒருசில படங்களில் மட்டுமே நடிக்கிறார்.
இதுகுறித்து அவரிடம் கேட்டபோது, “தமிழ்ல இருந்து என்னைத் தேடி கதைகள் எதுவும் வரல. ‘ஜெய்பீம்’ படம் ரிலீஸானபிறகு நிறைய கதைகள் வரும்னு நினைச்சேன். ஆனா, நான் நினைச்ச மாதிரி நடக்கல. அதுதான் நான் குறைவான படங்கள்ல நடிக்க காரணமே தவிர, வேற எதுவும் இல்ல.
ஒருவேளை, ‘ஜெய்பீம்’ மாதிரியான கேட்டகிரி படங்கள்ல மட்டும்தான் நான் நடிப்பேன்னு நினைச்சிட்டாங்களோ என்னவோ… ஆனா, நான் எல்லாவிதமான படங்கள்லயும் நடிக்க ஆசைப்படுறேன். கதையும், என் கேரக்டரும் பிடிச்சிருந்தா போதும்” என வெளிப்படையாகத் தெரிவித்துள்ளார்.