இலங்கையில் படமாகும் ‘பெத்தி’

மெகா பவர் ஸ்டார் ராம் சரண், ஜான்வி கபூர் நடிக்கும் ‘பெத்தி’ படத்தின் பாடல் படப்பிடிப்பு, இலங்கையில் நடைபெறுகிறது.

மெகா பவர் ஸ்டார் ராம் சரண் நடிப்பில்,  பெரும் எதிர்பார்ப்புகளை ஏற்படுத்தியுள்ள கிராமிய அதிரடி திரைப்படமான ‘பெத்தி’ படத்தின் தயாரிப்பு பணிகள் வெகு வேகமாக நடந்து வருகின்றன.

புச்சி பாபு சானா இயக்கும் இப்படத்தில், ஜான்வி கபூர் நாயகியாக நடிக்கின்றார். விருத்தி சினிமாஸ்  சார்பில் வெங்கட சதீஷ் கிலாரு தயாரிக்க, மைத்ரி மூவி மேக்கர்ஸ் மற்றும் சுகுமார் ரைட்டிங்ஸ் பெருமையுடன் வழங்கும் இப்படம், மிகப்பெரிய பட்ஜெட்டில் பிரம்மாண்டமாக உருவாகி வருகிறது.

இந்நிலையில், ராம் சரண், இயக்குநர் புச்சி பாபு சானா மற்றும் குழுவினர் அடுத்தகட்ட படப்பிடிப்பிற்காக இலங்கை சென்றுள்ளனர். அங்கு நாளை முதல் ஆரம்பமாகும் படப்பிடிப்பில், இலங்கைத் தீவின்  பல அற்புதமான இடங்களில், ராம் சரண் மற்றும் ஜான்வி கபூர் பங்குபெறும் ஒரு அழகான பாடல் படமாக்கப்பட உள்ளது. இப்படத்திற்கு ஆஸ்கர் விருது பெற்ற ஏ.ஆர்.ரஹ்மான் இசையைமைக்கிறார்.

‘பெத்தி’ படம், இயக்குநர் புச்சி பாபு சானாவுக்கு மிகவும் பெருமைக்குரிய முயற்சி ஆகும். இதில், ராம் சரணை இதுவரை காணாத பல்வேறு வித்தியாசமான தோற்றங்களில் காட்டத் திட்டமிட்டுள்ளார். தனது கதாபாத்திரத்திற்காக  முழு அர்ப்பணிப்புடன், கடின உழைப்புடன் அதிரடி காட்சிகளில் தீவிரமாக பணிபுரிந்து வருகிறார் ராம் சரண்.

கருநாடக சக்கரவர்த்தி சிவ ராஜ்குமார், ஜெகபதி பாபு, திவ்யேந்து சர்மா ஆகியோர் இப்படத்தில் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர்.

இப்படத்தின் தொழில்நுட்பக் குழுவில் முன்னணி கலைஞர்கள் இணைந்துள்ளனர். ஆர்.ரத்னவேலு ஒளிப்பதிவு செய்ய, தேசிய விருது பெற்ற நவீன் நூலி, எடிட்டராக பணிபுரிகிறார்.

பான் இந்தியத் திரைப்படமாக உருவாகிவரும் ‘பெத்தி’, வருகிற 2026 மார்ச் 27-ம் தேதி வெளியிட திட்டமிடப்பட்டுள்ளது.