சினிமாவில் என்ட்ரி குடுத்த சூர்யா – ஜோதிகா மகள் தியா

சூர்யா – ஜோதிகா தம்பதியின் மகளான தியா, ‘லீடிங் லைட்’ என்ற ஆவணப்படத்தின் மூலம் இயக்குநராக சினிமாவில் என்ட்ரி குடுத்துள்ளார்.

முன்னணி நடிகர்களான சூர்யா – ஜோதிகா தம்பதிக்கு, தியா என்ற மகளும், தேவ் என்ற மகனும் உள்ளனர். தியா மும்பையில் படிப்பதால், சூர்யா தன் குடும்பத்துடன் சென்னையில் இருந்து மும்பைக்கு குடிபெயர்ந்து, அங்கேயே வசித்து வருகிறார்.

இந்நிலையில், ‘லீடிங் லைட்’ என்ற ஆவணப்படத்தை இயக்கியுள்ளார், தியா. 13 நிமிடங்கள் ஓடக்கூடிய இந்த ஆவணப்படம், பாலிவுட்டில் லைட் வுமன்களாகப் பணியாற்றுபவர்களின் அனுபவங்களை மையமாக வைத்து டாக்கு டிராமாவாக உருவாக்கப்பட்டுள்ளது. சூர்யாவின் 2டி என்டெர்டெயின்மென்ட் நிறுவனம் இந்த ஆவணப்படத்தைத் தயாரித்துள்ளது.

ஆஸ்கருக்கு தகுதி பெறுவதற்காக, அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் உள்ள ரீஜென்சி தியேட்டரில் இந்த ஆவணப்படம் திரையிடப்படுகிறது. செப்டம்பர் 26 முதல் அக்டோபர் 2 வரை தினமும் மதியம் 12 மணி காட்சியாக இந்த ஆவணப்படம் திரையிடப்படுகிறது.