ராம் சரணின் ‘பெடி’ ஃபர்ஸ்ட் லுக் வெளியீடு

புச்சிபாபு சனா இயக்கத்தில் ராம் சரண் நடிக்கும் ‘பெடி’ படத்தின் ஃபர்ஸ்ட் லுக் வெளியிடப்பட்டுள்ளது.

‘குளோபல் ஸ்டார்’ என்று அழைக்கப்படும் ராம் சரணின் 16வது படத்துக்கு ‘பெடி’ என்று தலைப்பு வைக்கப்பட்டுள்ளது. தேசிய விருது பெற்ற ‘உப்பென்னா’ படத்தை இயக்கிய புச்சிபாபு சனா, இந்தப் படத்தை இயக்குகிறார்.

கன்னட மெகா ஸ்டார் சிவராஜ் குமார் முக்கியக் கதாபாத்திரத்தில் நடிக்கும் இந்தப் படத்தில், ஹீரோயினாக ஜான்வி கபூர் நடிக்கிறார். ஜெகபதி பாபு, திவ்யேந்து சர்மா உள்ளிட்ட பலர் நடிக்கும் இந்தப் படம், பான் இந்தியத் திரைப்படமாக உருவாகி வருகிறது.

ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைக்கும் இந்தப் படத்தில், ஒளிப்பதிவாளராக ஆர்.ரத்னவேலுவும், எடிட்டராக நவீன் நூலியும் பணியாற்றுகின்றனர். விருத்தி சினிமாஸ் சார்பில் தயாரிப்பாளர் வெங்கட சதீஷ் கிலாரு தயாரிக்கிறார். மைத்ரி மூவி மேக்கர்ஸ் மற்றும் சுகுமார் ரைட்டிங்ஸ் ஆகிய இரு நிறுவனங்களும் இணைந்து இந்தப் படத்தை வழங்குகின்றன.

இந்தப் படத்தின் ஃபர்ஸ்ட் லுக், சமீபத்தில் வெளியிடப்பட்டது. அதில், சுருட்டு புகைத்தபடி வித்தியாசமான தோற்றத்தில் ராம் சரண் காணப்படுகிறார். மிகப்பெரிய பட்ஜெட்டில் இந்தப் படம் தயாராகி வருகிறது.